‘‘காஷ்மீரில் வன்முறைகள் நீடிக்கும் வரை, பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க முடியாது’’ என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து, 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. பாகிஸ்தானும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும் தொடர்ந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வன்முறைகளை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் ‘பெல்லட்’ ரக குண்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குண்டுகள் உயிரிழப்பை ஏற்படுத்தாது. ஆனால், கண்கள் பறிபோகும். காயங்கள் ஏற்படும். இந்நிலையில், ‘‘பெல்லட் வகை குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். போராட்டங்களின் போது பெல்லட் குண்டுகளை பயன்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரி காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி அலி முகமது மாக்ரே ஆகியோர் நேற்று (வியாழன்) விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
காஷ்மீரில் தெருவுக்குத் தெரு வன்முறைகள் நீடிக்கும் வரை, பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க முடியாது. நிலைமை கட்டுப்பாட்டில் இல்லாத போது வன்முறை கும்பலை ஒடுக்க பலத்தை பிரயோகிப்பது தவிர்க்க இயலாதது. காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெல்லட் குண்டுகளுக்கு மாற்றாக வேறு வழிமுறைகளை கண்டறிய நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
அந்த குழு தனது அறிக்கையை இன்னும் அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. அந்த குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னர், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.