சீனாவுடனான எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சிறப்புப் பிரதிநிதியாக அஜித் தோவல் செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீனாவுடன் எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ளார். என்எஸ்ஏ-வின் பணிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
மத்திய இணையமைச்சர் பொறுப்புக்கு இணையான தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு இந்த பொறுப்பு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மே மாதம் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட போதிலும், சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்படாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினையை, சிறப்புப் பிரதிநிதிகளைக் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது என கடந்த 2003-ம் ஆண்டு இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. சீனா தரப்பிலும் இணை அமைச்சர் நிலையிலான அதிகாரி சிறப்புப் பிரதிநிதியாக செயல்படுவார். இதுவரை நடைபெற்ற 17 சுற்று பேச்சுவார்த்தையின் மூலம் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.