இந்தியா

சந்தேகத்திற்கிடமான டெபாசிட்கள் மீது 1,100 சோதனைகள், 5,100 நோட்டீஸ்கள்: நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி

பிடிஐ

பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான டெபாசிட்கள் மீது இதுவரை 1,100 ரெய்டுகளும், சுமார் 5,100 நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்கு எழுத்துபூர்வ பதிலில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ரெய்டுகள் மூலம் சுமார் ரூ.610 கோடி மதிப்பான சொத்துகள் பிடிபட்டுள்ளன, இதில் ரூ.513 கோடி ரொக்கமாக பிடிப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.

“பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நவம்பர் 9 முதல் ஜனவரி 10, 2017வரை சுமார் 1,100 சோதனைகள் நடைபெற்றதோடு இதன் மீது 5,100 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதாவது சந்தேகத்திற்கிடமான அதிக அளவிலான டெபாசிட்கள் மீது இந்த நோட்டீஸ்களை வருமானவரித்துறை அனுப்பியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் ஜனவரி 10 வரை ரூ.5,400 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் சிக்கியுள்ளன” என்றார் அருண் ஜேட்லி.

இன்னொரு தனிப்பட்ட கேள்விக்கு மத்திய நிதி இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறும்போது, “நவம்பர் 8, 2016-ல் 17,165 மில்லியன் ரூ.500 நோட்டுகளும், 6,858 மில்லியன் ரூ.1000 நோட்டுகளும் சுழற்சியில் இருந்தன.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூ.500, ரூ.1000 டெபாசிட்களாக ரூ.12.44 லட்சம் மீண்டும் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளது” என்றார்.

அருண் ஜேட்லி மேலும் கூறும்போது, “இந்த நடவடிக்கை ஊழல், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், தீவிரவாத நிதியுதவி ஆகியவற்றை ஒழிப்பதான அரசின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இது தொடர்பாக தேவையான தகவல்களை பெறுவதற்கும், விசாரணை, ரெய்டுகள், ஆய்வுகள், வருவாய் மதிப்பீடு செய்வதற்கும், அபராதம் மற்றும் குற்ற நடைமுறைகளை தொடர்வதற்கும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க சிறப்பு விசாரணைக் குழு, பரவலான சட்ட அமலாக்கம், பினாமி சொத்து தடைச் சட்டத் திருத்தம் ஆகியவையும் இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT