காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. டி.ராஜேந்தரின் ‘உறவை காத்த கிளி’ திரைப்படம் முலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜீவிதா. அதன்பிறகு பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த இவர், நடிகர் டாக்டர். ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது ஹைதராபாத்தில் வசிக்கும் இவர்கள் தெலுங்கு திரைப்பட தயாரிப்பிலும் ஈடு பட்டு வருகின்றனர். இதுதவிர, ஜீவிதா தற்போது தெலங்கானா மாநில பாஜக பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு ‘எவடைதே நாகேண்ட்டி’ (யாராக இருந்தாலும் எனக் கென்ன) எனும் தெலுங்கு சினிமாவை ஜீவிதா தயாரித்தார். இதில் ராஜசேகர் கதாநாயகனாக நடித்தார். இதன் உரிமையை வழங்குவதாகக் கூறி சோமசேகர ரெட்டியிடமிருந்து ரூ. 22 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒப்புக்கொண்டபடி திரைப்பட உரிமையை வழங் காமல் வாங்கிய தொகையை காசோலையாக திருப்பி வழங்கி யுள்ளார். ஆனால் அந்த காசோலை பணமில்லாமல் திரும்பி உள்ளது.
இதையடுத்து, பணத்தைத் திருப்பித் தரும்படி ஜீவிதாவிடம் பல முறை கேட்டுள்ளார் சோமசேகர். இதை அவர் கண்டு கொள்ளாததால் கடந்த ஜனவரி மாதம் எர்ர மஞ்சில் நீதிமன்றத்தில் சோமசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
ஜீவிதா புகார்
எர்ர மஞ்சில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்த ஜீவிதா, தீர்ப்பு வெளியான பின்னர் தனது வழக்கறிஞர் மூலம் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நேற்று மாலையே அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதுகுறித்து ஜீவிதா செய்தி யாளர்களிடம் கூறும்போது, “தயாரிப்பாளர் சோமசேகர் ரெட்டி எனக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது. அவர் என்னை மோசடி செய்து விட்டார். இந்த வழக்கில் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார்.