இந்தியா

இளைஞரின் தற்கொலைப் பின்னணியில் சாதிய பாகுபாடு: வீடியோ மூலம் வெளிவந்த உண்மை

ஹேமானி பந்தாரி

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதி பாகுபாடு காரணமாக உளவியல் மற்றும் உடல்ரீதியாக சித்திரவதைக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹரியாணா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்த விஜயகுமார் (33) என்ற இளைஞர் டெல்லி மற்றும் அதன் அண்டைப் பகுதிகளில் வாகனத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அவ்வீடியோ பதிவு சாதி பாகுபாடுதான் விஜயகுமாரை தற்கொலைக்கு தூண்டியுள்ளது என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் விஜயகுமார் பதிவு செய்த வீடியோவில் கூறியுள்ளதாவது, "எனது கிராமத்தைச் சேர்ந்த உயர் வகுப்பைச் சேர்ந்த 3 பேர் தொடர்ந்து எனக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்தனர். என் பெயரையும், எனது தந்தை பெயரையும் மாற்றிக் கொள்ளுமாறு அவர்கள் கூறினர். அவ்வாறு நாங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் கிராமத்திலிருந்து வெளியேற்றி விடுவதாக மிரட்டினர். நான் என் சுயமரியாதையை இழந்து விட்டேன். என் குழந்தைகள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.

விஜயகுமார் மரணம் குறித்து தி இந்து ஆங்கிலத்திடம் அவரது குடும்பத்தினர் கூறும்போது, "சாதி ரீதியாக இத்தகைய துன்பங்களை விஜய் அனுபவித்து வருவதை அவர் எங்களிடம் கூறவில்லை. அவர் இறப்பதற்கு முன்னர் எங்களை தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நாங்கள் அவரை சென்றடைவதற்குள்ளாக அவர் இறந்து விட்டார்" என்றனர்.

முதல் முறை அல்ல:

விஜய குமார் தந்தை கூறும்போது, "சாதி ரீதியாக தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏழு வருடத்துக்கு முன்னர் கூட உயர்சாதி வகுப்பினரால் நான் தாக்கப்பட்டேன், நான் நடத்தி வந்த கடை கூட இங்கு இருக்கும் அவர்களது தூண்டுதல் காரணமாக மூடப்பட்டது. அவர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் முட்டை விற்றதற்காக நான் துன்புறுத்தப்பட்டேன். அதன் பிறகு எனது தொழிலையே நான் மாற்றிக் கொண்டேன். விஜய குமார் மரணத்தால் தற்போது குடும்பத்திலுள்ள 17 பேரையும் கவனிக்கும் பொறுப்பு எனது தோலில் விழுந்துள்ளது” என்றார்.

குற்றவாளிகள் கைது:

விஜய குமாரை தற்கொலைக்கு தூண்டிய மூவரையும் போலீஸார் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT