‘‘நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று சிறப்பு விசாரணை குழு தலைவர் ஆர்.கே.ராகவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவினர், குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கை விசாரித்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்து ராகவன் கூறியதாவது:
இந்த வழக்கில் 36 பேரை நீதிமன்றம் விடுவித்தது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
இந்த தீர்ப்பு குறித்து பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் வெற்றி பெற முடியாது. விசாரணை அதிகாரி என்ற முறையில் இந்த வழக்கில் என்னால் முடிந்த வரையில் உண்மைகளை சேகரித்து நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளேன். ஆனால், எங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றம் முழுமையாக ஏற்கவில்லை. எனவேதான் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலரை விடுவித்துள்ளது. நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் விசாரணை அதிகாரி எல்லா உண்மைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரத்தில் நீதிமன்றம்தான் இறுதி முடிவெடுக்கும்.
இவ்வாறு ராகவன் கூறினார்.