டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக-வின் கீர்த்தி ஆசாத், கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் விளக்கம் அளித்துள்ளார்.
கட்சி நடவடிக்கை பற்றி கவலைப்படாத கீர்த்தி ஆசாத், அருண் ஜேட்லி மீது கடும் விமர்சனங்களை வைத்தார். இதுகுறித்து கட்சிக்கு அவர் அளித்துள்ள பதிலில் அருண் ஜேட்லியின் டெல்லி கிரிக்கெட் சங்கப் பதவிக்கும், கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதபோது கட்சி ஒழுங்கு என்பதையும் பதவியையும் அவர் கேடயமாக எப்படி பயன்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடந்த 9 ஆண்டுகளாக டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேடுகளை எதிர்த்து தான் போராடி வருவதாகவும் ஒரு போதும் பாஜக தன்னை இது குறித்து தடுத்ததில்லை என்றும் கூறியுள்ளார் கீர்த்தி ஆசாத்.
அதாவது, தான் ஜேட்லியையோ, வேறு எந்த பெயரையோ இந்த முறைகேடு தொடர்பாக குறிப்பிடவில்லை. ஏனெனில் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பாஜக அவரை நியமிக்கவில்லை எனும்போது எந்த அடிப்படையில் அவர் கட்சியை கேடயமாகப் பயன்படுத்த முடியும் என்கிறார்.
முந்தைய பாஜக தலைவர்களை பெயர் கூறாமல் சுட்டிக்காட்டிய கீர்த்தி ஆசாத், “மரியாதைக்குரிய அந்த 3 கட்சித் தலைவர்களும் கிரிக்கெட்டுக்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தனர், மேலும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஜேட்லியின் பங்கு அவரது சொந்த விவகாரம் என்றே அவர்கள் கருதியிருந்தனர்.
டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் பற்றி வீரர்கள் சிலர் (பிஷன் பேடி மற்றும் சிலர்) மற்றும் நான் புகார் எழுப்புவது குறித்து அருண் ஜேட்லி தவிர வேறு எந்த நிர்வாகியும் தாங்கள் இடருற்றதாக உணர வேண்டியதற்கான காரணங்கள் எதுவும் இல்லை.
எனவே, கட்சிக்குத் தொடர்பில்லாத விவகாரத்தில் ஒருவர் தன் சொந்த விருப்பத்தில் ஈடுபடுகிறார், ஆனால் அவர் ஈடுபட்டுள்ள அந்த விவகாரத்தின் மீது ஊழல் புகார்கள் எழும்பும் போது கட்சி ஒழுங்கு என்பதை அவர் கேடயமாக பயன்படுத்த முடியுமா என்பது எனக்குப் புரியவில்லை.
அவர் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஒரு அமைப்பை நடத்துவதன் மீதான அனைத்து இடர்பாடுகள், சிக்கல்கள், ஆகியவற்றுக்கு பொறுப்பாகிறார், அப்படியிருக்கையில் நிர்வாக முறைகேடு, மோசடி, ஊழல் புகார்களில் இவர் மீது புகார்கள் எழும்போது கட்சியைக் கேடயமாக அவர் பயன்படுத்த முடியாது.
அமித்ஷாவிடம் நான் டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான ஆவணங்களை கொடுக்க விரும்புவதாகவே தெரிவித்தேன்.
ஆனால், அதற்கான அழைப்பு எனக்கு வரவில்லை, எனவே கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களுக்கும் கட்சிக்கும் எந்தவித தொடர்புமில்லை என்ற புரிதலுக்கு நான் வந்தேன், நான் கட்சியிலிருந்து ஒருவர் பெயரையும் குறிப்பிடவில்லை எனவே கட்சி ஒழுங்கை நான் மீறவில்லை. நான் ஜேட்லியையோ, கட்சியின் எந்த உறுப்பினர் பெயரையோ கூறவில்லை.
நான் கடந்த 22 ஆண்டுகளாக கட்சிக்கு உண்மையானவனாகவே இருந்துள்ளேன். எனது வெற்றி மற்றும் எனது அடையாளம் பாஜக-வினால் எனக்குக் கிடைத்ததே”
இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.