இந்தியா

மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு எம்எல்ஏ ரோஜா வலியுறுத்தல்

என்.மகேஷ் குமார்

திருப்பதி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நேற்று திருப்பதி மாநகராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், லோக் சத்தா, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நகரி தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டார்.

பின்னர் அவர் ‘தி இந்து’ விற்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமா?

கண்டிப்பாக வழங்க வேண்டும். மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்தபடியும், மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்த வகையிலும் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்குவது அவசியம்.

மாநில சிறப்பு அந்தஸ்து விவகா ரம் அரசியலாக்கப்பட்டுள்ளதா?

இதனை அரசியலாக்கியவர்கள் பாஜகவும், தெலுங்கு தேசம் கட்சியினரும்தான். தேர்தலுக்கு முன் இதே திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக இந்த ஏழுமலையான் சாட்சியாக வாக்குறுதி அளித்தனர். நடிகர் பவன் கல்யாணும் அவர்களுக்கு ஆதரவாக பேசினார். தற்போது இவர்கள் ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆன பின்னர், சிறப்பு அந்தஸ்து வழங்க 14-வது நிதி கமிஷன் ஒப்புகொள்ளவில்லை என கூறுகின்றனர். 14வது நிதி கமிஷன் அமைவதற்கு முன்னரே இவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

மத்தியில் பாஜ அரசு பெரும் பான்மையுடன் ஆட்சி அமைத்துள் ளது. பிரதமர் மோடி கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கதிதான் எதிர் காலத்தில் பாஜவுக்கும் நேரிடும்.

பவன் கல்யாண் தற்போது மாநில சிறப்பு அந்தஸ்துக்காக குரல் கொடுத்து வருகிறாரே?

பவன் கல்யாண் கடந்த இரண் டரை ஆண்டுகளாக எங்கே போயிருந்தார்? இவர் உண்மை யிலேயே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரானால் என்.டி. ராமாராவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும். சிறப்பு அந்தஸ்துக்காக எங்களுடன் சேர்ந்து போராட முன் வரவேண்டும்.

சிறப்பு அந்தஸ்துக்கு பதில், சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதே?

நமது நாட்டில் ஏற்கெனவே 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளதால், பல தொழிற்சாலைகள் அமைக்கப் பட்டு, வேலை வாய்ப்பும் பெருகி உள்ளன. ஆனால் ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தற்போது அதனை மழுப்ப, சிறப்பு நிதி வழங்குவதாக கூறுகிறது. அப்படியானால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் சேர்ந்து சிறப்பு நிதி வழங்குமா? இது மக்களை ஏமாற்றும் வாக்குறுதி. வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜ, தெலுங்கு தேச கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

SCROLL FOR NEXT