இந்தியா

அதிகார சர்ச்சை: ஆம் ஆத்மி அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

பிடிஐ

டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்புகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரும் ஆம் ஆத்மி அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பில் உள்ளது. மத்திய அரசின் துணை நிலை ஆளுநராக நஜீப் ஜங் பதவி வகிக்கிறார். முதல்வராக கேஜ்ரிவால் பொறுப்பேற்றது முதல் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பாக அதிகாரிகள் நியமனத்தில் டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. டெல்லி அரசு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகளை ஆளுநர் நஜீப் ஜங் ரத்து செய்தார். இதுதொடர்பான வழக்குகளில் டெல்லி உயர் நீதிமன்றமும் தீர்ப்புகளை வெளியிட்டது.

இந்நிலையில், டெல்லி அரசுக்குள்ள அதிகாரங்கள் விஷயத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘‘டெல்லி மக்களுக்கு எந்த சேவையும் செய்ய முடியாமல் அரசு தள்ளப்பட்டுள்ளது. மாநில அரசுக்குள்ள எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொள்ளலாமா? டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மாற்றுகிறது அல்லது ரத்து செய்கிறது’’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, ‘‘மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை சட்டப்படி உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும். எனவே, மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் பிரச்சினையை விசாரிக்கும் அதிகாரம் எந்த நீதிமன்றத்துக்கு உள்ளது என்பது குறித்து முடிவாகும் வரை, டெல்லி உயர் நீதிமன்றம் எந்த தீர்ப்பையும் வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக கருதி ஏற்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதையடுத்து ஆம் ஆத்மி அரசின் மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்த உள்ளது.

SCROLL FOR NEXT