லோக்ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பிஹாரில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். டெல்லியில் நடந்த இக்கட்சியின் உயர்நிலை அரசியல் குழு நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்ஜனசக்தியின் உயர்நிலை அரசியல் குழு கூட்டம், அக்குழுவின் தலைவரும் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வானின் தலைமையில் நடந்தது.
காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம் இடையிலான கூட்டணி பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் இருப்பதால், கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்க ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. இது குறித்து ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிஹாரின் 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 25, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 15 என்ற அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்களை ஒரு கூட்டணிக் கட்சியாகவே அவர்கள் கருதத் தயாராக இல்லை. எனவே, வேறு முடிவை எடுக்க கட்சி எனக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. முன்னதாக லாலு ஜெயிலில் இருந்தபோது, சோனியாவை இருமுறை சந்தித்தும் பயன் இல்லை. காங்கிரஸ் தரப்பிலிருந்து கூட்டணி பற்றி எவ்விதத் தகவலும் இல்லை என்றார் பாஸ்வான்.
இதையடுத்து ராம்விலாஸ் பாஸ்வான், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த பாஸ்வான், குஜராத் கலவரத்தைக் காரணம் காட்டி தேசிய ஜன நாயகக் கூட்டணியிலிருந்து வெளி யேறினார்.