பிஹாரில் மதுவிலக்கை மீறியதாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லலன் ராம், கட்சியில் இருந்து நேற்று தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
அவுரங்காபாத் மாவட்டம், குதும்பா தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான லலன் ராம், பீர் அருந்துவது போல் வீடியோ ஒன்று வெளியானதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார். மதுவிலக்கை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஹாரில் கடந்த ஏப்ரல் 5 முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் மது விலக்கை மீறியதாக ஆளும் கட்சியின் நடவடிக்கைக்கு ஆளான 2-வது பிரமுகர் லலன் ராம். இதற்கு முன் இதே குற்றத்துக்காக எம்எல்சி மனோரமா தேவி கட்சியில் இருந்து தற்காலிமாக நீக்கப்பட்டார்.
கயா மாவட்டத்தில் உள்ள மனோரமா தேவி வீட்டில் மது பாட்டில்கள் இருந்ததை தொடர்ந்து, அவர் கடந்த மே 18-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக பதவி வகிக்கிறார்.