பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண்களுக்கு இரவு நேரங்களில் பணி வழங்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் உயிரி தொழில்நுட்பம் (பிடி) ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய குற்றங்களைத் தடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை கூட்டுக்குழு உருவாக்கப்பட்டது.
பெங்களூரு சாந்திநகர் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஏ.ஹாரீஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் உட்பட 21 பேர் இடம்பெற்றிருந்த னர். இந்த குழு கடந்த ஒரு ஆண்டாக இன்ஃபோசிஸ், பயோ கான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடம் பெண்களின் பணி நிலை குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து இக்குழு கர்நாடக சட்டப்பேரவையில் தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், “தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு காரணங் கள், தனிப்பட்ட காரணங்களுக் காக இரவு நேரங்களில் பணி வழங்கக் கூடாது. பெண்களுக்கு காலை அல்லது பிற்பகல் நேர பணி மட்டுமே வழங்க வேண்டும். இரவு நேரங்களில் ஆண்களைப் பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்” என பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த கடைகள் மற்றும் வணிக வளாகங் கள் சட்டம் 1961-ம் பிரிவின்படி பெண்களுக்கு இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட் டுள்ளது. கர்நாடக அரசின் தொழிற் சாலை சட்டம் 1948-ன் பிரிவுகளும் இதனை உறுதி செய்கின்றன. எங்களது பரிந்துரை சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இருப்பினும், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை ஏற்க வேண்டும்.
இதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களை உரிய காலத்தில் விசாரித்து, கடுமை யான தண்டனை வழங்கப்படுவ தில்லை. வழக்கு விசாரணை நீண்டுகொண்டே போவதால் பல வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். இதே நிலையே குழந்தை நல வழக்கு களிலும் நீடிக்கிறது. பெண் சிசு கொலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்''என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு தனி பேருந்து வசதி, கட்டணமில்லா தொலை பேசி அழைப்பு வசதியை பெண் கள், குழந்தைகள், மூத்த குடி மக்களுக்கு அளிக்க வேண்டும்.
பெங்களூருவில் மட்டுமே உள்ளதைப் போன்ற பிங்க் போலீஸ், பிங்க் போலீஸ் செயலி உள்ளிட்ட சேவைகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்பது குறித்து கர்நாடக அமைச்சரவை முடிவு செய்யும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் உமா தெரிவித்துள்ளார்.