இந்தியா

தேஜ்பால் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பதிவு

செய்திப்பிரிவு

தன்னுடன் பணிபுரிந்தவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா காவல் துறை இன்று குற்றச்சாட்டு பதிவு செய்தது.

கடந்த ஆண்டு நவம்பரில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஹோட்டல் லிப்ட்டில், தேஜ்பால் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார்.

தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா போலீஸாரால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது சதா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்த நிலையில், தேஜ்பால் மீது பாலியல் துன்புறுத்தல், தவறான முறையில் தடுத்து நிறுத்துதல், தனது கட்டுப்பாட்டில் உள்ள பெண்ணை பலாத்காரம் செய்வது ஆகிய பிரவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் அனுஜா பிரபு தேசாய் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தேஜ்பாலுக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT