இந்தியா

திமுக உட்பட அனைத்து வாய்ப்புகளையும் அலசுவோம்- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா பேட்டி

ஆர்.ஷபிமுன்னா

மக்களைவைத் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதில் திமுக உட்பட அனைத்து வாய்ப்புகளையும் அலச இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து டி. ராஜா, ‘தி இந்து’விடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கூட்டணியைப் பொறுத்தவரை எந்த முடிவு எடுத்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தே எடுப்போம். திமுக தலைவர் விடுத்துள்ள அழைப்பை கணக்கில் எடுத்து இருக்கிறோம். அடுத்தகட்ட நிலை குறித்து நாளை (சனிக்கிழமை) டெல்லியில் நடைபெறவிருக்கும் எங்கள் நிர்வாகிகள் மற்றும் தேசிய செயற்குழு கூட்டத்தில் அனைத்து வாய்ப்புகளையும் ஆலோசிக்க இருக்கிறோம்.

கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் கட்சியின் தேசிய மற்றும் மாநில நலன், தமிழக மக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டதாக இருக்கும். இதற்கு மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கலாம். தமிழகத்தில் கூட்டணி முறிந்ததற்கு அதிமுகதான் காரணம்.

இவ்வாறு ராஜா கூறினார்.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய அளவிலான நிலையை வைத்து முடிவு எடுப்பதாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, நரேந்திர மோடியுடனான ஜெயலலிதாவின் நட்பு குறித்து கம்யூனிஸ்ட்களுக்கு நன்றாக தெரியும். எனினும், பாஜகவுடன் அதிமுக சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அமைத்த மாற்று அணியில் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்போது, அதிமுகவுடன் தமிழகத்தில் கூட்டணி முறிந்த நிலையில் தேசிய அளவிலான மாற்று அணியில் அதிமுக உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ராஜா கூறுகையில், ‘காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி அல்லாமல் சேர்க்கப்பட்ட மாற்று அணியில் உள்ளார்களா என்பதை அதிமுகதான் விளக்க வேண்டும்’ என்றார்.

தேசிய அளவில் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸூக்கு ஆதரவளிக்கப்படாது என்ற உறுதி கிடைத்தால் தவிர, கம்யூனிஸ்ட்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது.

திமுகவிடம் இருந்து இது போன்ற உறுதி கிடைப்பது மிகவும் கடினம் என்பதால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இடதுசாரி தலைவர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT