இந்தியா

துணிவிருந்தால் என்னை கைது செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள்: மத்திய அரசுக்கு மம்தா சவால்

பிடிஐ

துணிவிருந்தால் என்னை கைது செய்து, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சிரின்ஜாய் போஸை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு தனது கட்சியினரை குறி வைத்து பழிவாங்குவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்க வளாகத்தில் தனது கட்சியினரிடையே முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

பாஜகவைப் பார்த்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அச்சப் படக்கூடாது. பாஜகவின் சதிச் செயலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அவர்களை திருப்பித் தாக்குவோம். எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

மத்திய அரசுக்கு துணிச்சல் இருந்தால், என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். அதையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன். உங்களுக்கு (பாஜக) தைரியமிருந்தால் எனது ஆட்சியை கலைத்து விட்டு மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். அவ்வாறு ஆட்சியை கலைத்துவிட்டால், அடுத்து நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று பதிலடி தருவோம்.

நாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு அடிமையாக இருப்பவர்கள் அல்ல. மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறோம். எங்களை குறிவைத்து பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

டெல்லியில் மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்ற மாநாட்டில் (நேருவின் பிறந்த தின விழா மாநாடு) நான் கலந்து கொண்டேன். அதற்கு பழிவாங்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யை (சிரின்ஜாய் போஸ்) கைது செய்துள்ளனர். ஆனால், அதற்கு நான் அஞ்சமாட்டேன். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்

SCROLL FOR NEXT