இந்தியா

கர்நாடகாவில் தணிகிறது காவிரி வன்முறை: பெங்களூருவில் இயல்புநிலை திரும்புகிறது

இரா.வினோத்

ஊரடங்கு உத்தரவு ரத்து; இன்று ரயில் மறியல் போராட்டம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப் பட்டதைக் கண்டித்து பெங்களூ ருவில் வெடித்த வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு இயல்புநிலை திரும்புகிறது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 20-ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதைக் கண்டித்து பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய இடங் களில் கன்னட அமைப்பினர் தமிழகத்தைச் சேர்ந்த பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.

பெங்களூருவில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 16 இடங்களில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. தடையை மீறி கன்னட அமைப் பினர் நடத்திய வன்முறையில் இருவர் பலியாயினர்.

மேலும் பெங்களூரு, மைசூரு, மண்டியா மாவட்டங்களில் கலவரத் தைக் கட்டுப்படுத்த 30 கம்பெனி துணை ராணுவப் படையினர், 10 கம்பெனி சிஆர்பிஎப் படையினர், 5 கம்பெனி இந்தோ- திபெத் பாதுகாப்பு படையினர் வரவழைக் கப்பட்டனர். 15 ஆயிரம் கர்நாடக போலீஸார் மற்றும் 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழர்கள் வசிக்கும் பகுதிகள், தமிழக வாகனங்களுக்கு பலத்த‌ பாதுகாப்பு போடப்பட்டது.

பெங்களூருவில் வன்முறை அதிகரித்ததால் போக்குவரத்து முடங்கியது. பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட் டது. கடைகள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அமைதி திரும்புகிறது

இந்நிலையில் பெங்களூருவில் 16 இடங்களில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான கடைகள், உணவு விடுதிகள், வணிக வாளகங்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் ப‌ள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் செயல்பட தொடங்கின. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய போதும், பாதுகாப்பு காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படவில்லை.

இருப்பினும் கெங்கேரி, லக்கேரி, ஹெக்கனஹள்ளி உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருப்ப தால் அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மாநகரம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினரும், கர்நாடக போலீஸாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் கலவரத்தின்போது எரிக்கப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதேபோல மைசூரு, மண்டியா ஆகிய பகுதிகளிலும் அமைதி திரும்பி வருவதால் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் கடந்த 10 நாட்களுக்கு பிறகு மைசூரு - பெங்களூரு இடையே போக்குவரத்து தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும், கன்னட அமைப்பின ரின் போராட்டம் தொடர்வதால் கர்நாடகா- தமிழகம் இடையே போக்குவரத்து தொடங்கப்பட வில்லை. கர்நாடக பேருந்துகள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டதால், பயணிகள் சுமார் 2 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட் டது. தமிழ் சேனல்களின் ஒளி பரப்பு தொடங்கினாலும், அச்சம் காரணமாக தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை.

பொதுமக்களிடம் குறை கேட்பு

இந்நிலையில், கர்நாடக முதல் வர் சித்தராமையா பெங்களூரு மாநகர‌ காங்கிரஸ் எம்எல்ஏக்களு டன் நேற்று ஆலோசனை நடத்தி னார். அப்போது சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்தும், இனி இத்தகைய வன்முறைகள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆலோசித்தார்.

பெங்களூருவில் உள்ள தமிழர் களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும், வன்முறையால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் மக்கள் மத்தியில் எம்எல்ஏக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சித்தராமையா அறிவுரை வழங்கினார்.

இதனிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், வன்முறை வெடித்த கெங்கேரி, ராஜாஜி நகர், மைசூரு சாலை, நந்தினி லே - அவுட் உள்ளிட்ட இடங்கkaளில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மக்களை சந்தித்து, வன்முறை சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்ட அவர், வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவித்தார். இதேபோல வன்முறையில் தீயிட்டு கொளுத் தப்பட்ட தமிழக லாரிகளையும், கே.பி.என். நிறுவனத்துக்கு சொந் தமான பேருந்துகளையும் ஆய்வு செய்தார்.

ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு

காவிரி வன்முறையால் பெங்க ளூருவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் கூட்ட மைப்பான அசோசேம் தெரிவித்துள் ளது. இதேபோல கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டங்களால் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்க ளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கர்நாடக அரசு போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை மற்றும் ஓலா, உபேர் உள்ளிட்ட டாக்சி நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம், குறிப்பாக தமிழர்களுக்கு சொந்தமான சொத் துக்களின் சேதம் உட்பட ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரயில் மறியல் போராட் டம்

இந்நிலையில், கன்னட அமைப் புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று தடையை மீறி பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படங்களை கொளுத்த முயன்ற அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது வாட்டாள் நாகராஜ் கூறும்போது, “கன்னட அமைப்புகள் ஏற்கெனவே அறிவித்தபடி, வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 வரை கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

போலீஸார் எங்களது போராட் டத்துக்கு அனுமதி மறுத்துள்ள போதிலும், ரயில் மறியல் போராட் டத்தை திட்டமிட்டபடி நடத்து வோம்” என்றார். இதையடுத்து பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மட்டுமல்லாமல் கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது.

SCROLL FOR NEXT