ஜம்முவின் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் இந்திய நிலைகளைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த நான்கு நாள்களில் 8 ஆவது முறையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கார்கோலா எல்லைக்கு அருகே உள்ள சர்வதேச எல்லையில் காலை 9.30 மணிக்கு சந்தேகப்படும்படியான நடமாட்டம் இருந்தது. அந்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியத் தரப்பிலிருந்தும் எதிர்தாக்குதல் நடத்தப்படுகிறது.” என்றார்.
பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். கடந்த 14 ஆம் தேதி, சம்பா மாவட்டம் கடவ் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் எம். பாசு காயமடைந்தார்.
கடந்த 15 ஆம் தேதி, பாகிஸ்தான் படையினர் ஹம்ரிபுர் எல்லை அருகே நடத்திய தாக்குதலில் பிகார் படைப்பிரிவைச் சேர்ந்த எம்.எ். கான் உயிரிழந்தார்.
அதே நாளில், பாகிஸ்தான் படையினர் சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் இதர சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். கடந்த 16 ஆம் தேதியும் பாகிஸ்தானஅ படையினர் யூரி பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.