ஸ்டார்ட்-அப் திட்டமும், சகிப்பின்மையும் இணைந்து செல்ல முடியாது என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனக் கருத்து வெளியிட்டுள்ளார்.
மும்பையில் நிர்வாக மேலாண்மை மாணவர்களிடையே உரையாடிய ராகுல் காந்தி, 'ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவைப் பற்றிய ஒரு வளைந்து கொடுக்காத நிலைப்பாட்டை கொண்டிருக்கும் போது, ஸ்டார்ட்-அப் போன்ற திட்டத்துக்கோ சுதந்திரமான கருத்துகளின் புழக்கம் அவசியம். எனவே ஒரு புறம் ஸ்டார்ட்-அப் என்பது மறுபுறம் சகிப்பின்மையை வளர்ப்பது என்று மத்திய அரசின் செயல்பாடுகளில் முரண்பாடு இருப்பாதால் இரண்டும் இணை கோட்டில் பயணிக்க முடியாது' என்றார்.
மேலும் அவர் பேசும்போது, "ஆளும் கட்சியின் துணையான ஆர்.எஸ்.எஸ். உலகம் எப்படி இருக்க வேண்டு என்பது பற்றிய இறுக்கமான பார்வையை கொண்டுள்ளது. இந்தியாவுக்கான அவர்களது பார்வை வளைந்து கொடுக்காத தன்மை கொண்டது என்பதே என் கருத்து. ஆனால் நாட்டுக்குத் தேவை நெகிழ்வுத்தன்மையும் கருத்துகளின் சுதந்திரமான புழக்கமும்தான்.
ஸ்டார்ட்-அப் திட்டமும் வேண்டும், அதே வேளையில் சகிப்பின்மையுடனும் இருப்பேன் என்பது மிகப்பெரிய சுய-முரண்பாடாகும். சகிப்புத் தன்மை இன்றி செயல்பட்டால் ஸ்டார்ட்-அப், மற்றும் பொருளாதாரம் தோற்றே போகும்.
பாஜக மக்கள் திரளை வகைபிரிக்கின்றனர்: அவர்கள் இந்துக்கள் முஸ்லிம்கள், பெண் என்று வகை பிரிக்கின்றனர். நான் வகைபிரிக்க மாட்டேன். இதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
நீ இந்து, நீ முஸ்லிம், நீ பெண் என்று வகைபிரிக்கும் போது அது மதிப்பீடுகளை மறைத்து விடுகிறது.
ஸ்டார்ட்-அப்ஸ் திட்டத்துக்கு ஒரு முழு அளவிலான சூழல் தேவை. உள்கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறை தேவை. ஆனால் இங்கு நடைமுறைகள் மிகவும் சிக்கல் மிகுந்தவையாக உள்ளன.
இன்று ரூ.10,000 கோடி நிறுவனம் இருக்கிறது என்றால் எளிதில் நிதி முதலீடு கிடைத்து விடுவதில்லை. அதே வேளையில் பெரிய தொழிலதிபராக இருந்தால் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
சீனாவில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அதிகாரம் வெளிப்படையாக தெரிவது. இந்தியா அப்படியல்ல, இங்கு அதிகாரம் மையமற்ற ஒன்று.
சீனா தங்கள் சாதனைக்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தது தெரியுமா? பல லட்சம் பேர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர், இந்தியாவில் அப்படியெல்லாம் செய்ய முடியாது" என்றார் ராகுல் காந்தி.
மாணவர் ஒருவர், அரசியல்வாதிகள் கிரிக்கெட் போன்ற விளையாட்டின் நிர்வாகிகளாக இருக்கலாமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல், "அரசியலில் இருப்பவர்கள் விளையாட்டு நிர்வாகத்துடன் எவ்வகையிலும் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடாது என்றே நான் நினைக்கிறேன். கிரிக்கெட்டை அந்த விளையாட்டை விளையாடும் வீரர்கள் கவனித்துக்கொள்வார்கள். அரசியல்வாதிகள் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது" என்றார்.
பதான்கோட் தாக்குதல் குறித்து கூறும்போது, "தீவிரவாத தாக்குதல்களை முழுமையாக தடுக்க முடியாது. ஆனால் அவற்றிற்கு தகுந்த பதிலடி கொடுக்கலாம். நாம் எத்தகைய பதிலடி கொடுக்கிறோம் என்பதே முக்கியம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கால சூழலுக்கு ஏற்ப கொள்கைகளை வகுக்க வேண்டும் ஆனால் நம் வெளியுறவு செயலர் தேசிய பாதுகாப்பு படையினர்போல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பொருத்தமற்றவரை வேலைக்கு சேர்க்கும்போது பிரச்சினைகளே அதிகம்" என அவர் கூறினார்.