இந்தியா

ஆந்திரப் பிரிவினைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தை பிரித்து தனித் தெலங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிபதி எச்.எல்.டட்டூ தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் ஆந்திர பிரிவினைக்கு எதிராக கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது நீதிபதிகள், இவ்விவகாரத்தில் மாநில அரசு ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து மசோதாவை நிராகரித்த போதும் அதை மத்திய அரசு நிறைவேற்றக் காரணம் என்ன என்று விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், ஆந்திர பிரிவினைக்கு இடைக்கால தடை விதிக்கமுடியுமா என்பதை அரசியல் சாசன அமர்வு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆந்திர மாநில பிரிவினை சட்ட விரோதமானது என்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT