கைலாஷ் மானசரோவருக்கு செல்வதற்காக உத்தராகண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் நேற்று கூறியதாவது:
திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் (சிவ பெருமான் குடிகொண்டிருக்கும்) இந்துக்களின் புனிதத்தலமாக விளங்குகிறது. நமது பழங்கால கலாச்சார மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் இந்தப் பகுதிக்கு சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு விரும்புகிறது.
இதன் ஒரு பகுதியாக உத்தரா கண்ட் மாநிலம் வழியாக, எளிதில் மானசரோவர் செல்வதற்காக நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக இமயமலையில் உள்ள பாறைகள் நவீன இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. மிகக் கடினமான இந்தப் பணி அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த நெடுஞ் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் கடினமான மானசரோவர் பயணம் எளிமையானதாக மாறும். பயண நேரமும் குறையும்.
இப்போது யாத்ரீகர்கள் 2 வழிகளில் மானசரோவர் செல்கின்றனர். அதில் ஒன்று லிபுலேக் கணவாய் வழி. கரடுமுர டான இந்தப் பாதையின் மூலம் மானசரோவர் சென்றுவர 25 நாட்கள் ஆகிறது.
இதுதவிர சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா எல்லை முனையிலிருந்து பஸ் மூலமும் மானசரோவர் செல்லலாம். கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தபோது இது தொடர்பாக இந்தியா சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத் தானது.