கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு, டிராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவத் தளபதி தல்பீர் சிங் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். இவர்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தது. இந்தப் போரில் இந்திய வீரர்கள் 527 பேர் வீரமரணம் அடைந்தனர். 1800-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். ஆனால் பாகிஸ்தான் தரப்பில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்தப் போர் முடிவுக்கு வந்த ஜூலை 26-ம் தேதி, கார்கில் வெற்றி தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு கார்கில் வெற்றி தினத்தின் ஒருவார கால கொண்டாட்டம் இன்று நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் கார்கில் வெற்றி தினத்தையொட்டி, கார்கில் மாவட்டம், திராஸ் பகுதியில் போர் நினைவிடத்தில் ராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையும் தல்பீர் சிங் சந்தித்து பேசினார்.