'பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜ்னா' திட்டத்தின் கீழ் சோனியா, ராகுல் ஆகியோர் உத்தரப் பிரதேச கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.
'எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை' கடந்த சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112-வது பிறந்த தினத்தன்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி உட்பட பலரும் எம்.பி.க்கள் மாதிரி திட்டத்தின் கீழ் அவர்களுக்கு விருப்பப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள 790 எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
எம்.பி.க்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு கிராமத்தையும் தத்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவரின் சொந்த ஊராகவோ, நெருங்கிய உறவினர்களின் ஊராகவோ இருக்கக் கூடாது.
இந்த திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலுள்ள உருவா என்ற கிராமத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா தத்தெடுத்துள்ளார்.
இதே போல், அமேதி தொகுதியில் உள்ள ஜக்திஷ்பூர் கிராமத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தத்தெடுத்துள்ளார்.
ஆனால் இந்த திட்டத்தின் மூலம் கிராமத்தை தத்தெடுப்பதினால் பிரதமர் மோடியின் திட்டங்களை காங்கிரஸ் ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை என்று கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.