ரயில்கள் மீது ஏறி மறியல் செய்யும் நபர்களுக்கு, இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில்: ரயில் மறியலில் ஈடுபடும் போது போராட்டக்காரர்கள் ரயில் மீது ஏறுவதால் மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ரயில்வே மின் கம்பிகளில் 25000 வோல்ட் மின்சாரம் கடந்து செல்லும் என்பதால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அத்தகைய உயர் அழுத்த மின்சாரம் பாயும் கம்பிகளுக்கு 2 மீட்டர் தூரத்திற்குள் சென்றாலே மின்சாரம் தாக்கும்.
எனவே, ரயில்கள் மீது ஏறி மறியல் செய்வதை கைவிட வேண்டும் என்றும் அதையும் மீறி போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும், தமிழ் அமைப்புகள் சார்பாகவும் ரயில் மறியல் நடைபெற்றது.