உச்ச நீதிமன்ற உத்தரவால் சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்குமாறு மேற்கு வங்க ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து தலைமறைவான கர்ணன், தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வு பெற்றார். அவரை மேற்கு வங்க போலீஸார் கடந்த 20-ம் தேதி கோவை அருகே கைது செய்தனர். கர்ணனை மறுநாள் கொல்கத்தா அழைத்துச் சென்ற போலீஸார் அவை அங்குள்ள பிரசிடென்சி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவமனையில் கர்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு கர்ணன் தனது வழக்கறிஞர் மூலமாக மனு அனுப்பியுள்ளார். பணியில் இருக்கும் நீதிபதிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவு அரசியல்சாசனப்படி செல்லத்தக்கதா என மனுவில் சி.எஸ்.கர்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்கி அரசியல் சாசனத்தின் மாண்பை காக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ஜாமீன் அல்லது பரோல் வழங்க எவ்வித நிபந்தனைக்கும் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ள கர்ணன், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
சி.எஸ்.கர்ணனின் மனு விரைவு அஞ்சல் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் மேத்யூ ஜே.நெடும்பாரா கூறினார். மேற்கு வங்க முதல்வர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.