இந்தியா

அருணாச்சலில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பேமா காண்டு அரசு வெற்றி

பிடிஐ

அருணாச்சல பிரதேச சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பேமா காண்டு தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. முதல்வர் பேமா காண்டுவுக்கு ஆதரவாக 46 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். பாஜகவைச் சேர்ந்த 11 உறுப் பினர்கள் எதிர்த்து ஓட்டளித்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக பேமா காண்டு பதவியேற்று 4 நாட்களே ஆன நிலையில், நேற்று சட்டப்பேரவையை அவசரமாகக் கூட்டிய ஆளுநர் ததாகடா ராய், பெரும்பான்மையை நிரூபிக்கு மாறும் கேட்டுக்கொண்டார்.

44 எம்எல்ஏக்கள் ஆதரவு

இதன்படி, நேற்று காலை பேரவைக் கூடியதும், அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் பேமா காண்டு கொண்டுவந்தார். முன்னாள் முதல்வர் நபம் துகி உள்பட 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 சுயேட்சைகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பின்னர், நபம் துகி மற்றும் முன்னாள் முதல்வர் கலிகோபுல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் பேசிய முதல்வர் காண்டு, தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தற்கு நன்றி தெரிவித்தார்.

‘பிரதானமாக 26 பழங்குடியின பிரிவுகள் மற்றும் 100 உட் பிரிவுகளைச் சேர்ந்த சமுதாய மக்கள் வாழும் அருணாச்சல பிரதேசத்தில் அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதே என் லட்சியம்’ என பேமா காண்டு குறிப்பிட்டார்.

மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் வகையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பாரபட்சமின்றி, போதுமான நிதி அதிகாரங்கள் வழங்கப்படும் என்றார். செயல்படாத அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.

மொத்தம் 60 இடங்கள் கொண்ட அருணாச்சல சட்டப்பேரவையில், 58 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 2 சுயேட்சைகள் உள்பட 47 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளனர். 11 பேர் பாஜக எம்எல்ஏக்கள்.

புதிய சபாநாயகர் தேர்வு

அருணாச்சல பிரதேச சட்டப் பேரவையின் 11-வது சபாநாயகராக, டென்சிங் நொர்பு தொங்டாக் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக உள்ளிட்ட அனைத்து, 57 எம்எல்ஏக்களும் இவருக்கு ஆதரவு அளித்தனர்.

SCROLL FOR NEXT