அரசியல்வாதிகள் தங்கள் எதிர்கட்சித் தலைவர்கள் மீது விரோதம் கொள்ளக் கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
நேருவின் 125-வது பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய ராஜ்நாத் சிங், "எந்தவொரு தலைவரும் தங்கள் எதிர்க்கட்சியினர் மீது விரோதம் கொள்ளக் கூடாது. அதேபோல், மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் அரசியல் கட்சிகள் ஏற்படுத்தக் கூடாது.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மாற்றுக்கொள்கை கொண்ட அரசியல் தலைவர்களிடம் விரோதம் காட்டியதில்லை. 1963-ல் நடந்த குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் நேரு அழைப்பு விடுத்தார்.
எனவே, அரசியல் தலைவர்கள் எதிர்கட்சியினர் மீது விரோதம் கொள்ளக் கூடாது. தேவையற்ற அறிக்கைகள் மூலம் மக்கள் மனங்களில் பய உணர்வை ஏற்படுத்தக் கூடாது. இதற்கு மாறாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் இதையே நோக்கமாகக் கொண்டு செயல்படவேண்டும்” என்றார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பேசும்போது, ‘ஆத்திரக்காரர்கள் தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர். தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில்தான் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்' என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித் திருந்தார். இந்நிலையில் ராகுல் விமர் சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசினார்.
ராஜ்நாத் மேலும் பேசும்போது, “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த நாட்டை ஆளமுடியும் என்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் டீ விற்பவரும் பிரதமராக வரமுடியும் என்று இந்திய ஜனநாயகம் நிரூபித்துள்ளது.
குறுகிய கண்ணோட்டத்துடன் இந்தியாவை ஆளமுடியாது. இந்த உண்மையை நேரு உணர்ந்திருந்தார். எதிர்க்கட்சியினரிடம் அவர் விரோதம் காட்டியதில்லை. இந்திய ஜனநாயகத்தில் நேரு நம்பிக்கை கொண்டிருந்தார்.
இந்த ஜனநாயகம் உயர்வகுப்பு மக்களுக்கு மட்டுமல்ல. எனவேதான் எதிர்க்கட்சியினரும் நேருவை விரும் பினார்கள்” என்றார்.