சிறையில் இந்திராணி முகர்ஜி தாக்கப்பட்டது உண்மை என்பது மருத்துவ பரிசோதனை அறிக்கை யில் உறுதியானதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜியை (44) சிறை அதிகாரிகள் கொடூரமாகத் தாக்கியதாக அவர் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையடுத்து அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்திய நீதிமன்றம், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி அவருக்கு அரசு ஜேஜே மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், ‘இந்திராணியின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. தான் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் இது என அவர் கூறியது மருத்துவ சோதனையில் உறுதியாகி உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று நாக்பாடா காவல் நிலையத்துக்கு இந்திராணி சென்றார். தன்னை சிறை அதிகாரிகள் தாக்கியதாக எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்தார்.
அவரது மனுவில், ‘சிறை அலுவலர்களால் தாக்கப்பட்ட சக கைதி மஞ்சு கோவிந்த் ஷெட்டி உயிரிழந்த கோபத்தில் மற்ற கைதிகள் மீது அவர்கள் தாக்கியதாக’ குறிப்பிட்டுள்ளார்.
கைதி மஞ்சு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாநில பெண்கள் ஆணையம், சிறை அதிகாரிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து சிறைக் காவல் துணைத்தலைவர் ஸ்வாதி சதே, பெண்கள் ஆணையத்தின் தலைவர் விஜயா ரகாத்கர் முன்பு நேற்று ஆஜரானார். சிறையில் நடந்த சம்பவம் தொடர்பான அறிக்கை ஆணையத்திடம் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 23-ம் தேதி கைதி மஞ்சு கோவிந்த் ஷெட்டி, சிறை அதிகாரிகளின் சித்ரவதையால் உயிரிழந்ததாகக் கூறி கடந்த சனிக்கிழமை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வன்முறை யில் ஈடுபட்டதாக இந்திராணி முகர்ஜி உட்பட 200 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய் துள்ளனர். கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர் கள் மீது போலீஸாரும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.