இந்திய பிரதமர்கள் அனைவரும் பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். மாநாட்டில் இந்திய ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராஜ்நாத் சிங்கின் பேச்சை பாகிஸ்தான் அரசு ஊடகம் இருட்டடிப்பு செய்தது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நசீர் அலிகான் மதிய விருந்தை வேண்டுமென்றே புறக்கணித்தார். இத்தகைய அவமரியாதை நடவடிக்கைகளால் ராஜ்நாத் சிங் மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் நேற்று அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இஸ்லாமாபாத் சார்க் மாநாட்டில் இந்திய ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் எனது பேச்சை ஒளிபரப்பு செய்யவில்லை.
மாநாட்டின்போது பாகிஸ்தான் அமைச்சர் நசீர் அலிகான் எல்லோ ரையும் விருந்துக்கு அழைத்தார். ஆனால் அவர் விருந்தைப் புறக்கணித்து காரில் சென்று விட்டார். நான் விருந்து சாப்பிடுவதற்காக இஸ்லாமாபாத் செல்லவில்லை. இந்தியாவின் கவுரவத்தை காக்கும் வகையில் நானும் விருந்தில் பங்கேற்கவில்லை.
இந்திய பிரதமர்கள் அனைவரும் பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேண முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை.ஒரு நாட்டில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவரை மற்றொரு நாடு தியாகியாக போற்றி புகழ்பாடுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியபோது, இந்திய உள்துறை அமைச்சரை பாகிஸ்தான் நடத்திய விதம் வருத்தமளிக்கிறது. அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.
இதேபோல பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பாகிஸ் தானுக்கு எதிராக கண்டனத்தைப் பதிவு செய்தனர்.