இந்தியா

சவூதி அரேபியாவில் இருந்து 1.34 லட்சம் இந்தியர் நாடு திரும்பினர் - வயலார் ரவி தகவல்

செய்திப்பிரிவு

சவூதி அரேபியாவில் இருந்து இதுவரை 1.34 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

டெல்லியில் செய்தி யாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அவர் கூறியதாவது:

சவூதி அரேபிய அரசு அமல்படுத்தியுள்ள நிதாகத் என்ற சட்டத்தால் இந்தியர்கள் துன்புறுத்தப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து சவூதி அரசுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அந்த நாட்டுக் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தும் போது பொதுமக்களுக்கு எவ்வித இன்னலையும் ஏற்படுத்த வில்லை. இதுதொடர்பாக சவூதி அரசு, தனது அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு வெளியறவு அமைச்சகம் உதவி செய்து வருகிறது. அங்கிருந்து இதுவரை 1.34 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அந்த நாட்டு நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றார்.

சவூதி அரேபியாவில் சுமார் 80 லட்சம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். குறிப்பாக தமிழகம், கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், சவூதி அரேபியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதால் அனைத்து நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்தை உள்நாட்டு இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக நிதாகத் சட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

இதனால் வேலையிழக்கும் இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மேலும் சவூதி அரசும் வீடுவீடாக சோதனை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை வெளியேற்றி வருகிறது.

சட்டவிரோத தொழிலாளர்கள் வெளியேற அளிக்கப்பட்டிருந்த 7 மாதச் சலுகை கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வெளிநாட்டு தொழிலாளர்களை வெளியேற்றுவார்கள் என்று தெரிகிறது. எனினும், சலுகை காலம் இந்த ஆண்டு முழுவதும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா?

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பாரா என்று வயலார் ரவியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் வெளியறவுத் துறையும் பிரதமர் மன்மோகன் சிங்கும் முடிவெடுப்பார்கள் என்றார்.

அருணாசல பிரதேச மக்களுக்கு தனித்தாளில் முத்திரையிட்டு சீனா விசா வழங்கி வருவது குறித்து கேட்டபோது, இது வெளியுறவுத் துறை தொடர்பானது என்று பதிலளித்தார்.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிநாட்டுத் தூதர்களை சந்தித்து அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT