இந்தியா

கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசுச் சான்றிதழ் திருட்டு

வித்யா வெங்கட்

அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவரும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காகப் போராடிவருபவருமான கைலாஷ் சத்யார்த்திக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசுச் சான்றிதழ் அவர் இல்லத்திலிருந்து திருடப்பட்டுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகளுக்காக பச்பன் பச்சாவோ ஆந்தோலன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

தொழிலாளர்களாகப் பணியாற்றிவந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை பச்பன் பச்சாவோ ஆந்தோலன் அமைப்பு விடுவித்து அவர்களது மறுவாழ்வு, கல்விக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவரது இந்தச் சேவையை பாராட்டி கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திங்கட்கிழமை, டெல்லியிலுள்ள கைலாஷ் சத்யார்த்தி குடியிருப்பிலிருந்து அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசுச் சான்றிதழ் மற்றும் பிற முக்கியமான பொருட்களும் திருடப்பட்டுள்ளது.

இதனை பச்பன் பச்சாவோ ஆந்தோலன் நிறுவனத்தின் அதிகாரிகள் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சத்யார்த்தியின் மகன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குடியிருப்புக்குச் செல்லும்போது சான்றிதழ்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "நோபல் பரிசுச் சான்றிதழ் உட்பட நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்கஜி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

கைலாஷ் சத்யார்த்தி பிப்ரவரி 2 - 5 வரை நடைபெற்ற, அமைதிக்கான நோபல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கொலம்பியா சென்றிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

SCROLL FOR NEXT