பிரதமர் மோடி எதிர்காலத்தை நோக்குபவர், ராகுல் காந்தியோ நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துபவர் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது பிரதமர் அடுத்த தலைமுறையின் நன்மையை நோக்கி நடைபோட, ராகுல் காந்தியோ அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இடையூறு செய்வது எப்படி என்று யோசிப்பவர் என்று ஜேட்லி எழுதியுள்ளார்.
தனது வலைப்பதிவில் ரூபாய் நோட்டு நடவடிக்கை பற்றி அவர் கூறும்போது, “தற்போது நிலமைகள் முன்னேறியுள்ளன, இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. வலியும், சவுகரியக் குறைவுமான காலம் முடிவடைந்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு மீட்கப்பட்டு வருகின்றன.
பிரதமருக்கும் அவரை எதிர்ப்போருக்கு இடையே அடையாளப்படுத்தக் கூடிய வேறுபாடு என்னவெனில், எதிர்காலம் பற்றியும், நவீன தொழில்நுட்பம் செலுத்தும் சுத்தமான பொருளாதாரம் நோக்கிச் செயல்படுபவர் பிரதமர், தற்போது அவர் அரசியல் கட்சிகளுக்கு நிதி ஆதாரங்களை சுத்தப்படுத்துவது பற்றி பேசிவருகிறார். ஆனால் பிரதமரை எதிர்ப்போர் பணம் ஆதிக்கம் செலுத்தும், பணப்பெருக்க மற்றும் பணப்பரிமாற்ற அமைப்பு தொடர வேண்டுமென்று நினைக்கின்றனர்.
பிரதமருக்கும் ராகுல் காந்திக்கும் ஆன வேறுபாடு தெளிவானது, அடுத்த தலைமுறை பற்றி சிந்திப்பவர் பிரதமர், ஆனால் ராகுல் காந்தியோ அடுத்த நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது எப்படி என்று திட்டம் போடுபவர்.
125 கோடி மக்கள் தொகையில் 3.7 கோடி பேர்கள்தான் 2015-16-ல் வருமான வரி செலுத்தியுள்ளனர். இதிலும் கூட சுமார் 3 கோடி பேர் ஆண்டு வருவாயை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாகவே காட்டுகின்றனர். 24 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது வரி ஒத்துழைப்பு தராத சமூகத்தை நமக்கு அடையாளப் படுத்தும் புள்ளி விவரமாகும். வறுமை ஒழிப்பு, தேசப்பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை வரி வருவாய் இல்லாததால் சமரசம் செய்து கொள்ளப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகிறது. 70 ஆண்டுகளாக இந்திய ‘இயல்பு’ என்பது பகுதி ரொக்க மற்றும் பகுதி காசோலை பரிவர்த்தனையாகவுமே இருந்து வந்துள்ளது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் ‘புதிய இயல்பு நிலை’ என்பதை நோக்கி செயல்படுகிறது. இந்தியா மற்றும் இந்தியர்களில் செலவின முறைகளை மாற்றும் போது அது நிச்சயம் இடையூறு செய்வதாகத்தான் இருக்கும். அனைத்துச் சீர்த்திருத்தங்களும் இடையூறு செய்வதே. இதற்கு முன்னால் இருந்த நிலைமைகளை அது மாற்றும், தக்கவைக்காது. பணமதிப்பு நீக்கம் நேர்மையானவர்களுக்கு பொறுப்பாக உள்ளதோடு, நேர்மையற்ற நடத்தையை தண்டிப்பதாகும்.
சந்தையில் உலவி வந்த லட்சம் கோடிக்கணக்கான ரூபாய்கள் தற்போது வங்கி ஒழுங்கிற்குள் வந்துள்ளன பணம் தனது அனாமதேய தன்மையை இழந்ததோடு, பண உரிமைதாரர்களை வரிக்குள் கொண்டு வந்து அவர் அந்தப் பணத்தை மேலும் பயனுள்ள வழியில் செலவழிக்கச் செய்துள்ளது.
வங்கி நடவடிக்கைகள் இதன் விளைவாக பொருளாதாரம் ஆகியவற்றின் அளவு அதிகரிக்கவுள்ளது. நீண்ட கால அடிப்படையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிதாகவும் சுத்தமாகவும் இருக்கும். வங்கி நடவடிக்கைகளுக்குள் நுழையும் பணம் அதிகாரபூர்வ வர்த்தக நடவடிக்கைகள் மூலம் வரி வருவாய் பெருகும். அதாவது நேரடி மறைமுக வரி வருவாய் நிச்சயம் கூடும்.
பணமதிப்பு நீக்கம் என்ற ஒரு பெரிய முடிவையடுத்து சமூக ஒழுங்கு சீர்குலைவு ஏற்படவில்லை. அமைதியின்மை ஏற்படவில்லை. அனைத்து தனிப்பட்ட ஊடக ஆய்வுகளும் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவான சூழ்நிலையையே எடுத்துரைக்கிறது.
காங்கிரஸ் கட்சி போன்ற தேசிய கட்சியே இதனை அரசியலாக்குவது பெரிய துன்பமாகும். அது கறுப்புப் பணத்தின் பக்கம் சேர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார் அருண் ஜேட்லி.