இந்தியா

அடுத்த கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் ‘நீட்’ தேர்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை (நீட்) 2018-19-ம் கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை உருது மொழியிலும் நடத்த, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தனகவுடா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “நீட் தேர்வு நடத்தப்படும் மொழிகளில் உருது மொழியையும் இந்த ஆண்டிலேயே சேர்க்க சாத்தியமில்லை. அடுத்த கல்வியாண்டு முதல் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம். இந்த ஆண்டே தேர்வு நடத்துவது என்றால் அதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஏதேனும் அற்புதம் செய்யுமாறு மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. தேர்வு நடைபெறும் மொழிகளில் கூடுதலாக ஒன்றை சேர்ப்பது என்றால் அதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன” என்றனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறும்போது, “அடுத்த கல்வியாண்டு முதல் நீட் தேர்வை உருது மொழியிலும் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்றார்.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் உருது மொழியிலும் ‘நீட்’ தேர்வு நடத்த சாத்தியமில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது ‘நீட்’ தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, அசாமி ஆகிய 10 மொழிகளில் நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT