ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று பேருந்து ஒன்று மலைப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில், 21 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகரில் இருந்து நேற்று காலையில் புறப்பட்ட ஒரு பேருந்து உதம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காலை 10 மணியளவில் ககோர்ட் கிராமத்துக்கு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்ற அந்தப் பேருந்து ஒரு குறுகிய வளைவில் திரும்ப முயன்றபோது நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு முதலில் சென்ற அப்பகுதி மக்கள், சேதமடைந்த பேருந்துக்குள் இருந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து காவல் துறை மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
பேருந்து இடிபாடுகளுக்குள் இருந்து மொத்தம் 21 உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த 29 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகளை அதிக அளவில் ஏற்றி வந்த பேருந்து ஒரு ஆட்டோ ரிக்சா மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உதம்பூரில் நடந்த பேருந்து விபத்து குறித்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்களை விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.