இந்தியா

2029-க்குள் 21 மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் அமல்: அமித் ஷா உறுதி

டெக்ஸ்டர்

மும்பை: வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொதுசிவில் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது: “திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு உள்ளிட்ட குடும்ப விவகாரங்களில் மதம் கடந்து அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சட்டத்தைக் கொண்டுவரும் பொதுசிவில் சட்டத்தை ஏற்கனவே பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொதுசிவில் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நமது நாட்டின் பாதுகாப்பு கொள்கையைப் பொறுத்தவரை, வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு பறைசாற்றியுள்ளன. 2014-ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த ஊழல், சாதியவாதம் மற்றும் வாரிசு அரசியலில் இருந்து விலகி, 'இந்தியாவிற்கே முதலிடம்' என்ற கோட்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு வலுவான அரசாங்கத்தை நாம் அமைத்துள்ளோம்.

முன்னதாக பலவீனமான பொருளாதாரப் பட்டியலில் இருந்த இந்தியா, தற்போது 7.8% ஜி.டி.பி வளர்ச்சியுடன் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் 5-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. 370-வது சட்டப்பிரிவு நீக்கம், நக்சலைசம் ஒழிப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்கள் அனைத்தும் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள். மணிப்பூரில் 1951-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்துவது குறித்து அம்மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன; முடிவு எடுக்கப்பட்டதும் அறிவிக்கப்படும். மொழி விவகாரத்தில் தாய்மொழிக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், இதற்கான தீர்வை மாநிலத் தலைமைகளே கண்டறிவார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் உள்ள உரிமையை நாங்கள் மதிக்கிறோம். காங்கிரஸ் மனநிலையோடு நெருக்கடி நிலையை அமல்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாட்டின் எல்லை பாதுகாப்பு தொடர்பான வியூகங்களைப் பகிரங்கமாக பேசுவது ஆயுதப் படைகளுக்கு நல்லதல்ல என்பதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது.

மேலும், பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராகவும் பிரதமராகவும் தனது 25 ஆண்டு காலப் பொதுச் சேவையை நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாதம் நாடு முழுவதும் 'சேவா சங்கல்ப் அபியான்' பிரச்சாரம் நடத்தப்படும். வாக்குச்சாவடி நிலை வரை கொண்டு செல்லப்படவுள்ள இந்த முகாமில் 12 வகையான சிறப்பு நிகழ்ச்சிகளும், 'நமோ சேவையின் அறியப்படாத கதைகள்' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு 'விகசித் பாரத் 2047' இலக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்" இவ்வாறு அமித் ஷா பேசினார்

SCROLL FOR NEXT