சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை ஆதரித்து அவர் போட்டியிடும் ஆசாம்கார் தொகுதியில் பிரச்சாரம் செய்யத் தயார் என்று அவரிடம் இருந்து பிரிந்து சென்றவரும், தற்போது ராஷ்ட்ரிய லோக் தளம் சார்பில் பதேபூர் சிக்ரியில் போட்டியிடுபவருமான அமர் சிங் கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர், “ஆசாம்கார் தொகுயில் பாஜக வெற்றிபெற நான் விரும்பவில்லை” என்றார்.
முலாயம் சிங் யாதவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த அமர் சிங், 2010-ல் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அஜீத் சிங் தலை மையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இணைந்தார் அமர் சிங்.
பதேபூர் சிக்ரியில் அமர் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் உள்ளூர் தலைவர் சவுத்ரி பாபுலால் போட்டியிடுகிறார். இங்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநில கேபினட் அமைச்சர் அரிதமன் சிங்கின் மனைவி பக் ஷிலாவும், ஆம் ஆத்மி சார்பில் மகாவீர் சோலங்கி என்ற விவசாயியும் போட்டியிடுகின்றனர்.