தனக்கு அனுப்பப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் இயற்கை நீதிக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ். கர்ணன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இந்த உத்தரவை தானாகவே வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்து தீர்ப்பளித்தார்.
இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார். இதனிடையே பிரதமர் அலுவலகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதங்களை அனுப்பினார்.
இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண் டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் (கர்ணன்) மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும் நீதிபதி கர்ணன் நீதிமன்ற பணிகள், நிர்வாக ஆவணங்களை கொல்கத்தா உயர் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் தொடர்பாக உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கர்ணன் 4 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மீதான நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் இயற்கை நீதிக்கு எதிரானது. இது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்துக்கு எதிரா னது. உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன் றத்துக்கு அதிகாரம் இல்லை. எனது கருத்தை கேட்காமலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அடிப்படை தவறு.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அங்கு நடை பெற்ற ஊழல்களை ஒழிக்க வேண்டும் என்பதே எனது நோக்க மாக இருந்தது. நீதிமன்றத்தின் மாண்பை குலைக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணிய தில்லை. எனவே இந்த விவ காரத்தை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.