நாடு முழுவதும் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்ட 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மறு ஆய்வு செய்யத் திட்டமிட் டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 122 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த டாண்டன் குழு, அவற்றை மூன்று பிரிவுகளாக பிரித்தது. இதில், கடைசி பிரிவில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகா ரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை அளித்தது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப மையம், வேல்டெக் ரங்கராஜன் கல்லுாரி, பாரத் உயர்கல்வி மையம், சவீதா உயர்கல்வி மையம், சேலம் விநாயகா மிஷன், கற்பகம் தொழில்நுட்ப கல்லுாரி, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மையம் உள்ளிட் டவை அடங்கும்.
இதில், ஒரு பல்கலை உயர்கல்வி சிறப்பு மையம் என்று மாற்றிக் கொண்டது. இரண்டு பல்கலைக் கழகங்கள் நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை திரும்ப ஒப்படைத்து விட்டன. எஞ்சியுள்ள 41 கல்வி மையங்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விக்ரம்ஜித் சென் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. யுஜிசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “பட்டியலில் உள்ள 41 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை மறு ஆய்வு செய்ய யுஜிசி திட்டமிட்டுள்ளது,” என்றார்.
இதற்கு, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், “யுஜிசி, டாண்டன் குழு, அதிகாரிகள் குழு அளித்துள்ள மூன்று அறிக்கைகள் உள்ளன. எனவே, மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் அறிக்கைகளை வைத்தே முடிவு எடுக்கலாம்,” என்றார். இதுகுறித்து, மே 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.