நாட்டின் 65-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, வீரதீர செயல் புரிந்ததற்கான நாட்டின் உயரிய அசோக சக்ரா விருது ஆந்திரப் பிரதேச மாநில மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையின் முன்னாள் துணை ஆய்வாளர் கே.பிரசாத் பாபுவுக்கு மரணத்துக்குப் பிறகு வழங்கப்பட்டது.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, பிரசாத் பாபுவின் சார்பில் அவரது தந்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.
"மாவோயிஸ்டுகளுக்கு எதிரான படைக்கு (கிரேஹூன்ட்ஸ்) சிறப்பாக தலைமை தாங்கிய பிரசாத் பாபு, கடமை தவறாமல், வீர தீரச் செயல் புரிந்து தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார்" என அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில எல்லையில் 70 மாவோயிஸ்டுகள் கிரேஹூன்ட்ஸ் படையினர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பின்னர் பிரசாத் பாபு தலைமையிலான அந்தப் படை பதில் தாக்குதல் நடத்தியதில் 9 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
அடுத்த நாள் கமாண்டோ படையினரை அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடைசியாக 19 கமாண்டோக்களை மீட்கும்போது, சுமார் 70 மாவோயிஸ்டுகள் சுற்றிவளைத் தனர். எனினும், 14 பேர் ஹெலிகாப்டரில் ஏறிச் சென்றனர். பாபு உட்பட 5 பேர் மட்டும் அங்கிருந்தபடியே பதில் தாக்குதல் நடத்தினர். ஹெலிகாப்டர் சென்றதும் மாவோயிஸ்டுகள் சுற்றிவளைக்கவே, 4 கமாண்டோக் களை பின்னோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார். அவர்கள் பாதுகாப்பான இடத் துக்குச் சென்றனர். எனினும், பாபு கொல்லப்பட்டார்.