சமூக வலைத்தளங்களில் பாஜகவை எதிர்கொள்ளும் வகையில் “சைபர் படை” அமைக்க காங்கிரஸ் களம் இறங்கியுள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது பிரசாரத்துக்கு சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறார். அதற்குப் போட்டியாகவே காங்கிரஸும் சமூக வலைத்தளத்தில் குதிக்கிறது.
குஜராத் மாநிலம் பரூச் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கான இணையதள பயிற்சி முகாமில் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்பி வரும் பாஜக, மத்திய அரசு, காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு அவதூறான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறது. இப்போதுவரை அந்தப் பொய் பிரசாரம் குஜராத் மாநில அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது. அந்தப் பொய்களை நாடு முழுவதும் பரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.
இதை முறியடிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் விரைவில் சைபர் படை தொடங்கப்படும். அதற்காக தொண்டர்களுக்கு இப்போது சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெறும் தொண்டர்கள், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவார்கள். இதன்மூலம் பாஜகவின் பொய் பிரசாரத்தை முறியடித்து மக்களுக்கு உண்மைகள் எடுத்துரைக்கப்படும் என்றார்.
இதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, மும்பை பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, கட்சிக்காக வாக்களிக்க வேண்டாம், இந்தியாவுக்காக வாக்களியுங்கள் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அகமது படேல், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மோடி ஆதாயம் தேடப் பார்க்கிறார்.
குஜராத் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பாஜக தம்பட்டம் அடித்து வருகிறது. குஜராத்தில் 18 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். மின் உற்பத்தித் திட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுகின்றன. மாநிலத்தில் 45 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் வளர்ச்சிக்கு மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் வழிகாட்டுதல்கள்தான் காரணம். அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால் மோடியின் வளர்ச்சித் திட்டங்களை நிச்சயமாகப் புறக்கணித்திருப்பார்கள்.
மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதற்கு மோடி அலை காரணம் இல்லை என்றார்.