மலையாள நடிகை பாவனாவை துன்புறுத்திய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி, தன்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பாவனா. கேரள மாநிலம் கொச்சி அருகே கடந்த மாதம் 17-ம் தேதி இரவு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பாவனா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று 2 மணி நேரம் வரை பாலியல் ரீதியாக துன் புறுத்தியது. பின்னர் கொச்சி அருகே அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், பாவனா வின் முன்னாள் கார் ஓட்டுநர் முக்கிய குற்றவாளி ‘பல்சர்’ சுனில் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். இந்நிலை யில் ‘பல்சர்’ சுனிலை போலீஸார் நேற்று அலுவா முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் காவலில் மேற் கொள்ளப்பட்ட விசாரணை யின்போது, சுனில் உண்மை களை தெரிவிக்க மறுத்து வருவதால், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடும்படி, நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. அப்போது ‘பல்சர்’ சுனில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சுனிலின் போலீஸ் காவலை வரும் 10-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். காரில் கடத்திச் செல்லப்பட்ட பாவனாவை படம்பிடிக்க பயன்படுத்திய மொபைல் போன் குறித்து முன் னுக்குப் பின் முரணான தகவல் களை சுனில் அளித்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.