காஷ்மீரில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது என படைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரில் கடந்த 9-ம் தேதி கலவரம் நடைபெற்று வருகிறது. இதுவரை படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலியாகிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில், பிரதமர் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து ஆலோசித்துள்ளார்.
இக்கூட்டத்தின்போது, காஷ்மீரில் நிலவும் பிரச்சினை குறித்து பிரதமருக்கு நுணுக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இதுதவிர காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய பாதுகாப்புப் படைகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது.
அப்போது, காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் கலவரத்தை சாதகமாக்கிக் கொண்டு நடைபெறும் ஊடுருவல் முயற்சிகளை தடுக்கவும் உயர்மட்டக் குழு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது நீதி சாரா நடவடிக்கை கூடாது என அமைச்சர்கள் குழு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், "காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்யும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட படைபலம் தேவைப்பட்டால் அதை உடனடியாக அங்கு அனுப்பிவைக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.