இந்தியா

இணையதளங்களில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து பிரசாரம்

ஹெச்.ஷேக் மைதீன்

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரோ அரசு பிரதிநிதிகளோ யாரும் பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி இணைய தளங்கள் மற்றும் டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்களில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

நவம்பர் 15-ம் தேதி இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், இணைய தளங்கள் மற்றும் ட்விட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்களில் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக பிரசாரம் நடந்து வருகிறது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கம், இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே, காமன்வெல்த் கமிட்டிக்கு கடிதம் அனுப்பும் நண்பர்கள் ஆகிய பெயர்களில் பேஸ்புக் பக்கங்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தப் பக்கங்களில், விடுதலைப்புலிகள் இயக்க ஊடகப்பிரிவு செய்தியாளர் இசைப்பிரியா கொல்லப்பட்ட காட்சிகள், நோ பயர் சோன் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக, இலங்கையின் போர்க்குற்ற செய்திகள், தமிழ் அமைப்புகளின் அறிக்கைகளை பெரும்பாலோனோர் தங்களது சுய பக்கங்களில் பதிவேற்றம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதுதவிர நடிகர் விஜய் ரசிகர்கள் பெயரில் துவக்கப்பட்டுள்ள டுவிட்டர் சமூக வலைதளத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

‘கொழும்புவில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ (#IndiashouldnotattendColomboCommonwealth) என்ற வார்த்தைதான், தற்போது ட்விட்டரில் டிரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

இதை விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருவதாக பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

‘உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு இப்படி நடந்தால் அமைதியாக இருப்பீர்களா?’ என்ற குறிப்புடன், இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புகைப்படங்களை, விஜய் ரசிகர்கள் பெயரிலான டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ட்விட்டர் இணையதளத்தில், திமுக கட்சி பக்கத்தில் (DMK Party @arivalayam), இசைப்பிரியா கொடூரத்துக்கு பிறகாவது இந்தியா கண்ணீர் சிந்துமா என்ற திமுக தலைவரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என இந்தியப் பிரதமரின் அலுவலக ட்விட்டர் பக்கத்துக்கும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் டுவிட்டர் பக்கத்துக்கும் பலர் ட்விட் தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.

சேஞ்ச் (change.org) என்ற இணையதளத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டு ஓட்டெடுப்பு நடந்து வருகிறது.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, இலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள புகைப்படத்துடன், காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து பதிவு செய்யப்பட்டுள்ள புகாரின் பேரில் ஓட்டெடுப்பு நடத்தி, கையொப்பங்களுடன் 37 நாடுகளின் தூதரகங்களுக்கும், காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT