இந்தியா

போராட்டங்கள் வேண்டாம்: சுமுகத் தீர்வு காண ஜேஎன்யூ மாணவர்களுக்கு துணைவேந்தர் அழைப்பு

பிடிஐ

போராட்டங்கள் வேண்டாம்; பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காணலாம் என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜடேஷ் குமார் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக்காக 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சில மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கண்ணய்யா உள்ளிட்ட மாணவர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து ஜேஎன்யூ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸாரை அனுமதித்ததை வன்மையாக கண்டிப்பதாக ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்காக துணைவேந்தருக்கு அவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துணைவேந்தர் ஜடேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்து மாணவர்கள் கைது செய்யுமாறு நான் ஒருபோதும் போலீஸாரை அழைக்கவில்லை. நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு போலீஸாருக்கு ஒத்துழைத்தேன். அவ்வாறு ஒத்துழைப்பது என் கடமையாகும்.

கருத்து சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். அதேவேளையில் மாணவர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும். போராட்டங்களால் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கல்விக்கே முதலிடம். எனவே, மாணவர்கள் போராட்டங்களை கைவிட்டால் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காணலாம்" என்றார்.

சிவசேனா கண்டனம்:

இதற்கிடையில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து அரசியல் தலைவர்களிடம் இருந்தும் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற தகுதியை பறிக்க வேண்டும். நாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக முழங்குபவர்கள் தேசத் துரோகிகள் என அழைக்கப்பட வேண்டும் என்றும் சிவசேனா கூறியுள்ளது.

பிரச்சினையின் பின்னணி:

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் நடந்தது. அப்போது மாணவர்களில் ஒரு பிரிவினர், இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அஞ்சலி நிகழ்ச்சியை நடத்திய மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்து, அவர்கள் மீது தேச துரோக வழக்கை பதிவு செய்தனர். இதற்கு, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

மாணவர் சங்க தலைவர் கண்ணய்யா உட்பட 7 மாணவர்களையும் வகுப்புக்கு வர தடை விதிக்குமாறு நிர்வாகத்துக்கு பல்கலைக்கழக உயர்மட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

SCROLL FOR NEXT