யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரத்தை இனிவரும் தேர்தல்களில் பயன்படுத்தக் கோரி, ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் நேற்று தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரத்தை அறிமுகப்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரத்தை இனி வரும் தேர்தல்களில் உடனடி யாகப் பயன்படுத்தக் கோரி டெல்லி யில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு ஆத் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆத் ஆத்மி எம்எல்ஏ.க் கள், புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மின்னணு வாக்குப் பதிவு இயந் திரத்தில் முறைகேடு நடப்பது ஜனநாயகப் படுகொலை என்று அவர்கள் கோஷமிட்டனர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்படித்தான் சமீபத்திய உ.பி., உத்தராகண்ட் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என்று ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.