பிரதமரின் சுதந்திர தின உரையில், நீதித்துறை சந்தித்து வரும் பிரச்சினைகள் இடம்பெறாததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வருத்தம் தெரிவித்தார்.
நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.எஸ். தாக்குர் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, “எனது பணிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்ததாக நான் கருதுகிறேன். எனவே எனது மனதில் தோன்றியதை சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. உங்கள் மனதை தொடும் உண்மைகளை நான் பேசியாக வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி பிரதமரின் உரை மற்றும் சட்ட அமைச்சரை உரையை கேட்டோம். இவற்றில் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் நியமனம் குறித்த தகவல் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் இடம்பெறவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியில் 10 ஆண்டுகளுக்குள் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு முடிக்க முடியவில்லை. வழக்குகளின் எண்ணிக்கையும் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவேதான் இப்பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நான் கேட்டுக்கொண்டேன்” என்றார்.
இதனிடையே மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறதோ இல்லையோ, நீதிபதிகள் நியமனம் தடையின்றி நடைபெறும். புதிய நடைமுறைகள் இல்லாதது, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தடையாக இருக்காது” என்றார்.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறைகளை இறுதி செய்வதில் மத்திய அரசு – உச்ச நீதிமன்றம் இடையே சமீப காலமாக முரண்பாடு நிலவி வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 4 மூத்த நீதிபதிகளை கொண்ட ‘கொலீஜியம்’ பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். கொலீஜியம் அளிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவேண்டியது தற்போது கட்டாயமாக உள்ளது. ஆனால் இதற்கு மாறாக கொலீஜியத்தின் பரிந்துரையை தேச நலன் கருதி நிராகரிக்கும் உரிமை பெற மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த உரிமை குறித்து கொலீஜியம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில், “நீதித்துறையின் பளுவைக் குறைக்க மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை” என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் ஒரு பொதுநல வழக்கில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளின் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த கொலீஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு கிடப்பில் வைத்துள்ளதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு எச்சரித்தது.