இந்தியா

‘வெளிநாட்டு ஆயுதங்களை அதிகமாக வாங்க வேண்டாம்’: பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தல்

பிடிஐ

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் வெளிநாட்டு ஆயுதங்களை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று பேசியதாவது:

பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீடு 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன , செம்மையான ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.

துரதிருஷ்டவசமாக நமது படைகள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களை பெரிதும் சார்ந்திருக்கின்றன. தற்போதைய நிலையில், 70 சதவீதம் வெளிநாட்டு ஆயுதங்களை நம்பியிருக்கிறோம். இந்த அளவுக்கு சார்ந்திருப்பது நமது படைகளுக்கு பெரும் சுமையாகவும் ஆபத்தாகவும் இருக்கிறது. வெளிநாட்டு ஆயுதங்களைச் சார்ந்திருக்கும் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் செம்மையான ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT