பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கோருவதை ஏற்க முடியாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜாட் பிரிவினர் ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தை மறைமுகமாக குறிப்பிட்டு ஆர்எஸ்எஸ் இவ்வாறு தெரிவித் துள்ளது.
இட ஒதுக்கீட்டின் பலன் உண்மையிலேயே போய்ச் சேர வேண்டியவர்களுக்கு சேருகிறதா என்பதை ஆராய வேண்டியது அவசியம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அகில பாரத பிரதிநிதி சபையின் 3 நாள் கூட்ட நிறைவுக்குப் பிறகு நேற்று அதன் பொதுச்செயலர் சுரேஷ் பய்யாஜி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் சமூக நல்லிணக்கம் தேவை. ஜாதி பார்வையிலான பாகுபாடு, பாரபட்சத்துக்கு இந்து சமூகத்தில் உள்ளவர்களே பொறுப்பு. சமூக நீதியை அடைய இதை ஒழித்துக் கட்டுவது அவசியமாகும்.
வசதி படைத்த பிரிவினரும் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகின்றனர். இதை ஏற்கமுடியாது. சமூக நீதிக்காகத்தான் ஒதுக்கீடு ஏற்பாட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார்.
தற்போது இடஒதுக்கீடு கோருபவர்கள் இதை மனதில் கொள்ளவேண்டும். சமூகத்தில் வசதி படைத்தவர்கள் தமது உரிமைகளை கைவிட்டு சமூகத்தில் நலிவுற்று கிடப்பவர்களுக்கு உதவிடவேண்டும்.
கோயில்களில் அநீதி
சில கோயில்களில் பெண் களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அநீதி. இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட கோயில் நிர்வாகங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். எனினும் இந்த விவகாரத்துக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வை எட்ட முடியும்.
ஜே.என்.யூ. விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகா ரத்தை அரசியலாக்காமல் சட்டப் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஒரு கருத்தரங்கில் பேசியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.