இந்தியா

அனைவருக்கும் மின்சாரம்: துரிதகதியில் பணியாற்றும் யோகி ஆதித்யநாத் உ.பி.அரசு

செய்திப்பிரிவு

அனைவருக்கும் மின்சார வசதித் திட்டத்தின் கீழ் முதலில் மாவட்டத் தலைநகரங்களுக்கு தடையற்ற 24 மணி நேர மின்சார சேவைக்கான திட்டத்தை உ.பி.மாநில யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக அரசு அறிவித்துள்ளது.

அதே போல் கிராமப்புறங்களுக்கு 18 மணி நேர மின்சார சேவை, பந்தேல்கந்தில் தாலுகா மட்ட இடங்களுக்கு 20 மணி நேர மின்சார சேவை அளிக்க உ.பி. மாநில யோகி ஆதித்யநாத் பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.

இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன் மாநில அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் ஆகியோர் செய்தியாளர்களிடையே தெரிவிக்கும் போது, அனைத்து மாவட்ட தலைநகருக்கும் 24 மணி நேர தடையற்ற மின்சார சேவைத்திட்டம் முதலில் நிறைவேற்றப்படும் என்றார்.

“2018 வரை உ.பி.க்கு தடையற்ற மின்சாரம் என்பதே எங்களது குறிக்கோள்” என்று மின்சாரத்துறை அமைச்சர் ஷர்மா தெரிவித்தார்.

அதேபோல் கிராமங்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும், எனவே மாணவர்கள் தேர்வுக்கு படிக்க வசதியாக இருக்குமென்று முதல்வர் ஆதித்யநாத் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

“2018-ல் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி, ஏழை வீடுகள் மின்சார ஒளியால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே அமித் ஷா மற்றும் முதல்வர் ஆகியோரின் கனவு’ என்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் ஷர்மா.

மேலும் டிரான்ஸ்பார்மர்கள் நகர்ப்புறங்களில் 48 மணிநேரத்திலும், கிராமப்புறங்களில் 148 மணி நேரத்திலும் மாற்றப்படவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் எரிந்து போன டிரான்ஸ்பார்மர்களை கிராமப்பகுதிகளில் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் இதனால் வேளாண்மை பாதிக்கக் கூடாது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக மின்சார்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“யோகி அரசைப் பொறுத்தவரை ஏழை விவசாயியே விஐபி, எனவே மின்சாரத் திட்டம் இவர்களுக்காக முழு வீச்சில் செயல்படுத்தப்படும்” என்றார் ஷர்மா.

SCROLL FOR NEXT