தனியார் வானொலி நிலையங்கள், செய்தி ஒலிபரப்ப அனுமதி மறுப்பது ஏன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கேள்வி எழுப்பியுள்ளது.
காமன் காஸ் (Common Cause) என்ற, தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை விசாரித்த பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் : தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி ஒளிபரப்ப ஏற்கெனவே அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, தனியார் வானொலி நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியது.
காமன் காஸ் (Common Cause), தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி ஒளிபரப்ப அனுமதி அளித்துள்ளது போல் தனியார் வானொலி நிலையங்களும் செய்தி ஒலிபரப்ப அனுமதி வழங்க வேண்டும். ஏனெனில், வானொலிகள் அதிகமான மக்களை சென்றடையக்கூடிய ஊடகம், மேலும் வானொலி நிலையங்கள் அமைப்பதற்கு அதிக பொருட்செலவும் இல்லை என வாதிட்டார்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள் பெஞ்ச், தனியார் வானொலி நிலையங்களுக்கு, செய்தி ஒலிபரப்ப அனுமதி வழங்குவது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.