இந்தியா

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

ரூ.900 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கருவூலத்திலிருந்து சட்ட விரோதமாக பணம் எடுத்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முன்னாள் பிஹார் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ரா உட்பட குற்றம்சாட்டப்பட்ட பிறர் மீது தனியான விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1991-94-ல் தியோகார் கரூவூலத்திலிருந்து ரூ.84.53 லட்சம் தொகையை எடுத்தது மற்றும் ஆவணங்களில் முறைகேடு செய்தது தொடர்பாக லாலு உள்ளிட்டோர் மீது தனித்த விசாரணை வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து லாலு பிரசாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் லாலுவுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கைவிட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் லாலு உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

நவம்பர் 2014-ல் உயர் நீதிமன்றம் லாலு மீதான குற்ற விசாரணைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது. அதாவது குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி ஒரே குற்றத்தில் இருமுறை ஒருவர் மீது குற்றம்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணைகளை நிறுத்த உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் தற்போது தனித்தனியான விசாரணை தேவை என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐ-க்கு விசாரணையை முடிக்க 9 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.

1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது அரசியல் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருவேறு கருவூலங்களிலிருந்து இருமுறை எடுக்கப்பட்ட தொகை என்பது ஒரே குற்றம்தான் இதற்கு இருமுறை குற்றம்சாட்டமுடியாது என்பது உயர் நீதிமன்ற வாதம், இதைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்த போது, இரண்டு பணம் எடுப்புகளும் இருவேறு காலக்கட்டத்தில் நடந்துள்ளது, இரண்டு தடவைகளிலும் நிதி நஷ்டம், பாதிக்கப்பட்ட நபர்கள், பயனடைந்த நபர்கள் வேறு வேறு. எனவே பிரிவு 300 என்பதை இதில் கொண்டு வர முடியாது என்று சிபிஐ வாதிட்டது.

இதனையடுத்து தற்போது இரண்டு குற்றங்களும் வேறு வேறு எனக் கொண்டு உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT